செய்திகள்
அமைச்சர் சாமிநாதன்

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது

Published On 2021-09-07 09:50 GMT   |   Update On 2021-09-07 10:54 GMT
பணி காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும், குடும்ப உதவி நிதி உயர்த்தப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
சென்னை:

சட்டசபையில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் முதல் முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்-அமைச்சர் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.



அதன் அடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்த நல வாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

பணி காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும், குடும்ப உதவி நிதி உயர்த்தப்படும். தற்போது குடும்ப நிதி ரூ.3 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடும்ப நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர் கல்வி படிக்க அரசு நிதியுதவி அளிக்கப்படும். இந்திய அளவில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகே‌ஷன்ஸ், ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News