லைஃப்ஸ்டைல்
சுடு நீரில் குளிக்கலாமா?

சுடு நீரில் குளிக்கலாமா?

Published On 2021-02-05 07:29 GMT   |   Update On 2021-02-05 07:29 GMT
மிதமான சுடுநீரில் குளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தினமும் குளிப்பது உடலில் உள்ள அழுக்கை நீக்குவதோடு நோய்கள் நெருங்காமல் பாதுகாக்கவும் செய்யும். பெரும்பாலானோர் குளிர்ந்த நீரில்தான் குளிப்பார்கள். குளிர்காலங்களில் வெந்நீரை பயன்படுத்துவார்கள். அதேவேளையில் மிதமான சுடுநீரில் குளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

* மிதமான சுடுநீரில் சற்று அதிக நேரம் குளிப்பது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது எரிக்கப்படும் கலோரி களுக்கு சமமானது. சுடு நீரில் குளிக்கும்போது இதயம் வேகமாக இயங்கும். அதற்கேற்ப கலோரிகளும் வேகமாக எரியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வழக்கத்தை தொடர்வது நல்லது.

* சுடு நீரில் குளிப்பது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். சுடு நீரில் குளிக்கும்போது உடல் நெகிழ்ந்து மனமும் அமைதியாகிவிடும். அதனால் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அதன் காரணமாக இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும்.

* ரத்த ஓட்டம் சீராகும்போது அது நரம்பு மண்டல செயல்பாடுகளை மேம்படுத்தும். சுடு நீரில் குளிக்கும்போது தசைகளில் ஏற்படும் வலிகள் நீங்கிவிடும். தசைகள் இறுக்கம் குறைந்து நெகிழும். குளிக்கும்போது கை, கால்களை நீட்டி அசைப்பது மூட்டுகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்கும்.

* கோபமாக இருந்தாலோ, ஏதாவதொரு காரணத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்திருந்தாலோ வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. அது ரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு மனதையும் இலகுவாக்கும். இரவில் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

* நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது இதமளிக்கும்.
Tags:    

Similar News