செய்திகள்
கொள்ளிடம் அருகே பழையார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை படத்தில் காணலாம்.

படகு தளத்தை 300 மீட்டர் தூரம் நீட்டிக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை

Published On 2021-09-11 13:26 GMT   |   Update On 2021-09-11 13:26 GMT
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு தளத்தை 300 மீட்டர் தூரம் நீட்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 8,000 மீனவர்கள் 350 விசைப்படகு, மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். இங்கிருந்து ஒரு நாளில் ரூ.3 கோடிக்கு மீன்வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இத்துறைமுகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் கருவாடு அனுப்பி வைக்கப்படுகிறது. பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு தளத்தை 300 மீட்டர் நீட்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விசைப்படகு உரிமையாளர்கள் கூறியதாவது. கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத கனமழையால் கடலுக்கு சென்ற உபரிநீர் அடித்து வந்த மணல் திட்டுக்கள் பழையாறு துறைமுகத்தில் தேங்கியதால் படகு தளம் 200 மீட்டர் வரை மணல் மூடியுள்ளது. இதனால் படகை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை வேறு இடத்தில் இறக்கியோ அல்லது அடுத்தடுத்த படகின் வழியே தூக்கி வந்து ஏலக்கூடத்திற்கு கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய இடவசதி இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாகவும் எஞ்சிய படகுகள் பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்படுகிறது. இதனால் மீன் பிடிக்க செல்லும் போதும் அவசர காலங்களிலும் முன்னாள் நிற்கும் படகுகளை எடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த படகுகளை எடுக்க முடியும் நிலை உள்ளது.

எனவே 6 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க பழையாறு மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரி படகு தளத்தை 300 மீட்டர் தூரத்துக்கு நீட்டித்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News