உலகம்
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து

முக கவசம் இனி அணியத்தேவையில்லை: இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து

Published On 2022-01-28 02:53 GMT   |   Update On 2022-01-28 02:53 GMT
இங்கிலாந்து நாட்டில் கொரோனா பரவலும், ஒமைக்ரான் ஆதிக்கமும் குறைந்து விட்டது. இதன் காரணமாக கட்டுப்பாடுகளை ரத்துசெய்வதற்கு அங்குள்ள போரிஸ் ஜான்சன் அரசு முடிவு எடுத்தது.
லண்டன் :

இங்கிலாந்து நாடு, கொரோனாவால் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. அங்கு ஒமைக்ரான் தொற்று பரவத்தொடங்கியபோது, அதை தடுக்கவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட மக்களுக்கு நேரம் கிடைக்கவும் கடந்த டிசம்பர் மாதத்தொடக்கத்தில் ‘பிளான்-பி’ என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தற்போது அங்கு கொரோனா பரவலும், ஒமைக்ரான் ஆதிக்கமும் குறைந்து விட்டது. இதன் காரணமாக கட்டுப்பாடுகளை ரத்துசெய்வதற்கு அங்குள்ள போரிஸ் ஜான்சன் அரசு முடிவு எடுத்தது.

இது நேற்று அமலுக்கு வந்துள்ளது. இனி இங்கிலாந்தில் எங்கும் முக கவசம் அணிய வேண்டியதில்லை. இது மக்களுக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் கூறியதாவது:-

அரசின் தடுப்பூசி திட்டம், கொரோனா சோதனை, வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் ஆகியவை இணைந்து ஐரோப்பாவில் சில வலுவான பாதுகாப்புகளை உருவாக்குகின்றன. இது எச்சரிக்கையுடன் இயல்பு நிலைக்கு திரும்ப அனுமதிக்கிறது.

அதே நேரத்தில் நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் நீங்கவில்லை என்பதை தெளிவாக கவனிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட 84 சதவீதத்தினர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தகுதியானவர்களில் 81 சதவீதத்தினர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

முக கவசம் அணியத்தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறினாலும், சில கடைகள் மற்றும் பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள், மக்கள் முக கவசம் அணியுமாறு தொடர்ந்து கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளன. லண்டன் மேயர் சாதிக் கான், தலைநகரில் பஸ்கள், மெட்ரோ ரெயில்களில் முக கவசங்கள் இன்னும் தேவைப்படும் என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News