செய்திகள்
கோப்புபடம்

750 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்

Published On 2020-09-26 12:25 GMT   |   Update On 2020-09-26 12:25 GMT
கோவையில் வீட்டில் பதுக்கி விற்ற 750 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 3 பேர் சிக்கினர்.
கோவை:

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி 2-வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வீட்டில் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் இருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தாலாராம்(வயது 27), முல்லாராம்(28), மகேந்திரா(30) என்பது தெரியவந்தது. அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். மேலும் யாருக்கும் தெரியாமல் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து உள்ளனர். பின்னர் அவற்றை கோவை நகர பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து உள்ளனர். இது தவிர வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் குடியிருக்கும் பகுதிகளுக்கும் சப்ளை செய்து உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18 மூட்டைகள் அடங்கிய 750 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் எங்கிருந்து மொத்தமாக இவற்றை வாங்கி வந்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News