செய்திகள்
குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

கச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-11-30 14:00 GMT   |   Update On 2020-11-30 14:00 GMT
கச்சிராயபாளையம் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சிராயபாளையம்:

கச்சிராயபாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சியில் அக்கராயபாளையம், வடக்கநந்தல், அம்மாபேட்டை உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இதில் அக்கராயபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த பகுதி மக்களுக்கு கோமுகி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை அந்த பகுதிக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளாக இருந்ததால் பொதுமக்களுக்கு குடிநீர் தேவை இருந்தது.

பின்னர் இது குறித்து பேரூராட்சி ஊழியரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலையில் அக்கரைபாளையம் மாரியம்மன் கோவில் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செய்தனர். சரியானமுறையில் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கூறி சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News