வழிபாடு
மின்னொளியில் ஜொலிக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடக்கிறது

Published On 2022-01-27 03:28 GMT   |   Update On 2022-01-27 03:28 GMT
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சக்தி வாய்ந்த அம்மன் கோவிலாகும். ஊருக்கு தென்புறத்தில் கோவில் கொண்டுள்ள பட்டுக்கோட்டை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. ஒரு காலத்தில் நகரின் மேல் திசையில் கோட்டை கொத்தளத்துடன் விளங்கிய பட்டுக்கோட்டை அந்நியரின் படையெடுப்பால் கோட்டை தகர்க்கப்பட்டு சிற்றூராக இருந்து வந்தது. நாளடைவில் நாடியம்மன் தென் திசையில் அமர்ந்து வடபுறத்தில் கோட்டை கொத்தளம் இழந்து சிற்றூராய் சிதறிக்கிடந்த ஊரை செழிப்பாக்கி வளமிக்க நகராக்கிய நாடியம்மனுக்கு ஊர் கூடி இன்று(வியாழக்கிழமை) குடமுழுக்கு விழா நடத்துகிறது. கடந்த 2001-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை நாடியம்மனுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 23-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை ஆகியவையும், 24-ந்தேதி புனித மண் எடுத்து பூமாதேவி பூஜையும், அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று இரவு ஐந்தாம் கால பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் ஆறாம் கால பூஜை தொடங்கி யாத்ரா தானம் செய்து கடம் புறப்பட்டு கோவில் விமான குடமுழுக்கும், தொடர்ந்து நாடியம்மனுக்கு குடமுழுக்கும் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக்குழு தலைவர் பாரத் தலைமையில் விழாக்குழுவினர், திருப்பணி உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள், காப்புக்கட்டுதாரர்கள் செய்துவருகின்றனர். விழாவில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News