செய்திகள்
கோவை கலெக்டர் அலுவலகம்

97 வயது மூதாட்டி மகள்களுடன் தீக்குளிக்க முயற்சி- கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Published On 2020-12-29 09:20 GMT   |   Update On 2020-12-29 09:20 GMT
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டுதர வலியுறுத்தி 97 வயது மூதாட்டி மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் குப்பனூரை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 97). இவர் தனது மகள்களான மாரக்காள்(75), லட்சுமி(70), பாப்பாத்தி (65) ஆகியோருடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 4 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் 4 பேரிடமும் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், முருகம்மாளுக்கு 3 மகள்களும், ரங்கசாமி என்ற மகனும் உள்ளனர். மேலும் அவருக்கு அந்த பகுதியில் 12 ஏக்கரில் இடம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு மின் இணைப்புக்கு கையெழுத்து வேண்டும் என கேட்டு எனது மகன் ரங்கசாமி எனது நிலத்தை அபகரித்து விட்டார்.

இதற்கிடையே ரங்கசாமி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், அதன்பிறகு அந்த நிலம் குறித்து கேட்டால் மகனின் மனைவி இடத்தை தர மறுப்பதுடன், தங்களை துன்புறுத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும் இது குறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் மனு அளிப்பதற்காக எனது மகள்களுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததாகவும், எங்கள் நிலத்தை மீட்டு தர கோரி தீக்குளிக்கு முயன்றதாகவும் கூறினார்.

இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அன்னூர் தாசில்தார் சந்திராவுக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு குளிரில் நடுங்கியபடி நின்ற மூதாட்டிகளிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அன்னூர் தாசில்தார் அலுவலகம் வாருங்கள். அங்கு வைத்து பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்து வைக்கிறேன் என்று உறுதியளித்தார். இதனையடுத்து 4 மூதாட்டிகளும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News