செய்திகள்
ஆர்ப்பாட்டம்

பாம்பன் கடலில் இறங்கி 20-ந்தேதி ஆர்ப்பாட்டம்- நாட்டுப்படகு மீனவர்கள் அறிவிப்பு

Published On 2020-11-18 08:02 GMT   |   Update On 2020-11-18 08:02 GMT
பாம்பன் கடலில் இறங்கி 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்:

பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடல் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) மாவட்ட தலைவர் ஜஸ்டின், செயலாளர் கருணாமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:-

2016-ம் ஆண்டு முதல் 2020 ஜனவரி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 நாட்டுப்படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்டுள்ளன.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளை மீட்டு தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளையும் அமைச்சரையும் சந்தித்து மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் இலங்கை அரசு மீனவர்களின் 19 படகுகளில் 4 படகுகளை விடுவித்து 2 ஆண்டுகள் ஆகியும் கூட அரசு தரப்பில் எவ்வித உதவியும் இல்லை. இதனால் இலங்கை அர சால் விடுவிக்கப்பட்ட படகுகளும் சரி மேலும் விடுவிக்கும் நிலையில் இருந்த படகுகளும் சரி. இன்று வரை மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கால் மீட்க இயலாமல் படகுகள் அனைத்தும் இயற்கை சீற்றத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மூழ்கியும் மற்ற படகுகள் கொண்டு வர முடியாத அளவிற்கு பழுதடைந்தும் நாசமாகி உள்ளது.

இதனால் 19 நாட்டுப்படகு மீனவர்களும் ரூ. 5 கோடி படகுகளையும், வலைகளையும் இழந்து குடும்பங்களுடன் நடுத்தெருவில் நிற்கின்றனர். எனவே பாதிப்புக்குள்ளான 19 மீனவர் குடும்பங்களுக்கும் மறுவாழ்வு அளித்திட போர்க்கால அடிப்படையில் மாற்று தொழிலாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகுகளை முழு மானியத்துடன் வழங்க கோரி வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து பாம்பன் கடலில் இறங்கி கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாம்பன் அந்தோணியார் புரத்தில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் கடல் தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யூ. கிளை அமைக்கப்பட்டது.

தலைவராக எட்வின், செயலாளராக மரிய ரோஸ்டன், பொருளாளராக ஸ்டீபன், துணைத்தலைவர்களாக அந்தோணிச்சாமி, ராபிஸ்டன், துணை செயலாளர்களாக சேவியர், கேத்தரின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News