செய்திகள்
உலக பக்கவாத தின விழிப்புணர்வு கண்காட்சியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்ட போது

வேறு முறைகளில் கொரோனா பரிசோதனை செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Published On 2020-10-29 23:32 GMT   |   Update On 2020-10-29 23:32 GMT
ஆர்.டி.பி.சி.ஆர். முறை அல்லாமல் வேறு முறைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு மற்றும் உலக சொரியாசிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அங்கு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் இருந்த போதிலும் கூட, கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து மிக சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்த 46 பேருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இது போன்ற அவசர சிகிச்சை அளிப்பதற்காக, தமிழகம் முழுவதும் 120 அரசு மருத்துவமனைகளில் ‘தாய்’ எனப்படும் ‘தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 முதல் 6 லட்சம் செலவில் அளிக்கப்படும் இது போன்ற சிகிச்சைகள், அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. அதேபோல் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 4 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியுடன் சேர்த்து, டெங்கு தடுப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சென்னையில் டெங்கு பாதிப்பு 15 மடங்கு அதிகமாக இருந்தது. இதுவரை 96.6 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் முறை அல்லாமல், வேறு வகையில் கொரோனா பரிசோதனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் சி.டி. ஸ்கேன் மையங்களில் பரிசோதனை செய்யும் போது, நுரையீரலில் கொரோனா அறிகுறி கண்டறியப்படும் நபர்கள் குறித்த தகவல்களை சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காமல், விதியை மீறும் பட்சத்தில், அந்த மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அமைச்சருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பிளாஸ்மா சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.

அதேபோல் ரெம்டெசிவீர், எனோக்சோபோரின் போன்ற மருந்துகள் ஆரம்ப காலக்கட்டத்தில் கொடுப்பதால், நுரையீரல் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்ற கருத்தையும் டாக்டர்கள் முன்வைத்தனர். அந்தவகையில் மத்திய அரசு ஐ.சி.எம்.ஆர். மூலம் ஏதாவது வழிகாட்டு நெறிமுறைகள் அளிப்பதற்கு முன்பாக, எங்களது மருத்துவக்குழுக்களின் கருத்துக்களை பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தோம். அதை மத்திய அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி, துணை டீன் டாக்டர் ஜமிலா, டாக்டர்கள் கணேஷ், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News