ஆன்மிகம்
குமரியில் இருந்து சென்ற சாமி சிலைகளுக்கு கரமனையில் வரவேற்பு அளித்த போது எடுத்த படம்.

குமரியில் இருந்து புறப்பட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரம் சென்றன

Published On 2021-10-06 03:20 GMT   |   Update On 2021-10-06 03:20 GMT
குமரியில் இருந்து புறப்பட்ட நவராத்திரி சாமி சிலைகள் திருவனந்தபுரம் சென்று சேர்ந்தன. நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசாமி, பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்காட்டு சரஸ்வதி ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். அதன்படி சாமி சிலைகள் கடந்த 3-ந் தேதி குமரி மாவட்டத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டன. ஊர்வலத்திற்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்து அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை நெய்யாற்றின்கரையில் இருந்து புறப்பட்ட சாமி சிலைகள் ஊர்வலத்திற்கு நேமத்தில் திருவனந்தபுரம் தாசில்தார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு கரமனையிலும், மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் தளியலிலும், 6 மணியளவில் கிள்ளிப்பாலம் சந்திப்பிலும் சாமி சிலைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 7.30 மணியளவில் சரஸ்வதி தேவி சிலை பத்மநாபசாமி கோவில் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை குமாரசாமி சிலை ஆரியசாலை கோவிலிலும், முன்னுதித்த அம்மன் சிலை செந்திட்டை கோவிலிலும் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜை சடங்குகள் நடைபெற்றது.

நவராத்தி விழா இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த 9 தினங்களும் சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும். பின்னர், 17-ந் தேதி மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.
Tags:    

Similar News