செய்திகள்
இல.பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்த போது எடுத்த படம்.

ஆண்டிப்பாளையம், முருகம்பாளையம் பகுதியில் தார் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையரிடம் தி.மு.க. சார்பில் மனு

Published On 2021-10-22 09:03 GMT   |   Update On 2021-10-22 09:03 GMT
முத்தனம்பாளையம் கிருஷ்ணாநகர், பாலாஜிநகரை இணைக்கும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு அனுமதி வழங்கியும் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது.
திருப்பூர்:

தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, முத்தனம்பாளையம், ஆண்டிப்பாளையம் பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆணையாளர் கிராந்திகுமார் பாடியிடம் மனு கொடுத்தனர்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

முத்தனம்பாளையம் கிருஷ்ணாநகர், பாலாஜிநகரை இணைக்கும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு அனுமதி வழங்கியும் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது.

கோவில்வழி உயர்நிலைப்பள்ளி இடப்பற்றாக்குறையால் சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம் ஆகியவை முக்கிய சாலையோரம் உள்ளது. இதனால் பள்ளியை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். பிள்ளையார் நகரில் பிரதான சாலை, குறுக்குசாலை மற்றும் மழைநீர் வடிகால், மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இதுபோல் சக்தி நகர், சேரன் நகர், குபேரன் பிள்ளையார் நகர், விவேகானந்தா நகர் பகுதிகளில் சாலை, மழைநீர் வடிகால், மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். முத்தனம்பாளையம் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். 

15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பெரிச்சிப்பாளையம் மேல்நிலை தொட்டியில் இருந்து இங்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். வீரபாண்டி குப்பாண்டம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி, பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடங்களை சீரமைக்க வேண்டும். 

அப்பகுதியில் உள்ள வீதிகளில் தார்சாலை அமைக்க வேண்டும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆண்டிப்பாளையம்-முருகம்பாளையம் பகுதியில் தார் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News