செய்திகள்
கோப்புபடம்.

மடத்துக்குளம் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டுகோள்

Published On 2021-10-10 08:25 GMT   |   Update On 2021-10-10 08:25 GMT
முன்பதிவு செய்வதற்கு சிட்டா அடங்கல் உரிமைச்சான்று, வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் எண், குடும்ப அட்டை ஆகியவை தேவை.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் பகுதியில் தொடங்கியுள்ள அரசு நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து மடத்துக்குளம் வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

மடத்துக்குளம் ஆயக்கட்டுபகுதியில் குறுவை சாகுபடியில் 2,000 ஏக்கர் நெல் நடவு செய்யப்பட்டது. நடப்பு பருவத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் அதிகப்பட்சம் 3 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது.அறுவடை செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்க 3 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கண்ணாடிப்புத்தூர், கொமரலிங்கம் பகுதி விவசாயிகள், கண்ணாடிப்புத்தூர் கூட்டுறவு வங்கி வளாகத்திலுள்ள கொள்முதல் மையத்திலும், கணியூர், சோழமாதேவி விவசாயிகள் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள மையத்திலும், கடத்தூர், காரத்தொழுவு விவசாயிகள் துங்காவியிலுள்ள மையத்திற்கும் நெல்லை கொண்டு செல்லலாம். 

விவசாயிகளின் சிரமங்களைக்குறைக்க, அறுவடைக்கு சில நாட்களுக்கு முன்பே கொள்முதல் மையத்தை அணுகி தங்கள் விவரங்களை முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு செய்வதற்கு சிட்டா அடங்கல் உரிமைச்சான்று, வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் எண், குடும்ப அட்டை ஆகியவை தேவை. நெல்லை நன்கு உலர வைத்து பின்பு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். அறுவடை தொடங்கி கொள்முதல் வரையுள்ள நடைமுறையை கண்காணிக்கும் விதமாக கடத்தூரில் களத்தில் உலர வைத்துள்ள நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News