ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பித்தபோது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2020-12-22 03:56 GMT   |   Update On 2020-12-22 03:56 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் பெரிய சபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெண்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது. வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) மனோன்மணி அம்மாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

9-ம் திருவிழாவான 29-ந்தேதி இரவு முழுவதும் தாமிர சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 30-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு தாமிரசபை முன்பு பசு தீபாராதனையும், 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

இதேபோன்று நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. வருகிற 27-ந்் தேதி காலையில் அழகியகூத்தர், சபையில் இருந்து விழா மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 30-ந்் தேதி அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகமும், 5 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனையும் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருவெம்பாவை பாராயணம், மாணிக்கவாசகர் எழுந்தருளல் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு திருநடன தீபாராதனை நடக்கிறது.
Tags:    

Similar News