செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை படத்தில் காணலாம்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Published On 2019-11-07 10:39 GMT   |   Update On 2019-11-07 10:39 GMT
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள 8 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்கள் மழை கொட்டியதால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் கடும் குளிரும், பனி மூட்டமும் அதிகம் காணப்படுகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காலை 8 மணி வரை அதிகளவு உள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் ஏற்பட்டுள்ளதால் சீதோஷ்ண நிலை மாறியுள்ளது.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் அவதிப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் என ஏராளமான பேர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இன்று காலையிலும் ஏராளமான பேர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதில் 3 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள் ஆவார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்ட 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News