செய்திகள்
ராமதாஸ்

மேட்டூர் தண்ணீர் கெட்டுவிட்டது- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2019-11-07 10:23 GMT   |   Update On 2019-11-07 10:23 GMT
கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் கழிவுநீர் கலப்பதால் மேட்டூர் தண்ணீர் கெட்டுவிட்டதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முதலில் பச்சை நிறமாகவும், பின்னர் நீல நிறமாகவும் மாறி கடுமையாக நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளது. காவிரியில் கர்நாடகம் கழிவுநீரை திறந்து விட்டு அசுத்தப்படுத்துவது தான் இதற்கு காரணம் ஆகும்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 153.46 சதுர கி.மீ பரப்பளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேட்டூர் அணை இன்றைய நிலையில் முழுமையாக நிரம்பியுள்ளது. கடந்த 10 வாரங்களுக்கு மேலாகவே அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கூடுதலாக இருந்து வரும் நிலையில், தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது.

கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் கழிவுகள் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. இதை கர்நாடக அரசே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் தேக்கப்பட்டிருக்கும் நீரில் இத்தகைய பசுமைப் படிமம் ஏற்படுவதோ, அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோ புதிதான ஒன்றல்ல. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இதேபோன்று பசுமைப் படிமம் ஏற்பட்டு, நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு மீன்கள் செத்து மிதந்தன. அடிக்கடி மேட்டூர் அணை தண்ணீர் பசுமையாக மாறுவதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படாதது கேடானதாகும்.

மேட்டூர் அணை தண்ணீர் உடனடியாக தூய்மைப்படுத்தப்படாவிட்டால் அணை நீரில் உள்ள மீன்கள் மீண்டும் செத்து மிதக்கும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி, நோய்கள் பரவும் வாய்ப்புகளும் உள்ளன.

எனவே, மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்தவும், துர்நாற்றத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி நீர் தமிழக எல்லைக்குள் நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் தண்ணீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்து, அதில் எந்த அளவுக்கு கழிவுகள் கலந்துள்ளன என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

இதே ஆய்வை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு முறைப்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக காவிரியை கர்நாடகம் சாக்கடையாக பயன்படுத்தி கழிவு நீரை வெளியேற்றுவதை நிரந்தரமாகத் தடுக்கவும், இதுவரை காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெறவும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News