லைஃப்ஸ்டைல்
கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

Published On 2021-05-27 07:25 GMT   |   Update On 2021-05-27 07:25 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு? என்பது குறித்து குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறியதாவது:-
ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும். கொரோனா கிருமி நமது உடலுக்குள் சென்றவுடன் அதை எதிர்த்து நமது உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் போராடும். அப்போது நமது உடல் வெற்றி பெற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

ஆனால் தற்போது உள்ள கொரோனாவை எதிர்த்து வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது சைட்டோகெய்ன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். அது எதற்காக என்றால் வைரசை கொல்வதற்காகத்தான். ஆனால் இந்தத் திரவம் வைரஸை மட்டும் கொல்லாது. நமது நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு பிராணவாயு செல்லும் இடத்தையும் சேதப்படுத்தும். இது கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு 5-வது நாள் அல்லது 6-வது நாளில் நடக்கும். நமது உடலில் கொரோனா வைரஸ் இந்த சேதத்தை ஏற்படுத்த வில்லை. அந்த வைரசை எதிர்த்துப் போராடும் நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் அளவுக்கதிகமாக செயல்பட்டு சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை சுரப்பதினால் நுரையீரலின் மாற்றம் நடைபெறும் பகுதி சேதம் ஏற்படுகிறது. சேதத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.

அதனால் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்களால் சீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த சீராய்டு மருந்து வெள்ளை அணுக்களால் அதிகமாக சுரக்கப்படும் சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை கட்டுப்படுத்துகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் வந்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். சம்பந்தப்பட்ட நபர் காய்ச்சல் ஏற்பட்டதும் மாத்திரைகளை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவார். அதன் மூலம் குணமாகிவிடும். ஐந்து அல்லது ஆறாவது நாளில் மூச்சுத்திணறல் தொடங்கும். அப்படி தொடங்கினாலே கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியில் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.

எனவே முதலிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துவிட்டால் எளிதாக அவர்களது உயிரைக் காப்பாற்றி விடலாம்.

இவ்வாறு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறினார்.
Tags:    

Similar News