ஆன்மிகம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி

திருவானைக்காவல் கோவிலில் இன்று தை தெப்ப உற்சவம்

Published On 2021-01-27 08:34 GMT   |   Update On 2021-01-27 08:34 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப உற்சவம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெகிறது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் 10-ம் நாளான நேற்று காலை சுவாமி கேடயத்திலும், அம்மன் வெள்ளிமஞ்சத்திலும் 3-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர்.

இரவு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் யாளி வாகனத்திலும், அகிலாண்டேஸ்வரி புலி வாகனத்திலும் 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப உற்சவம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெகிறது. இதையொட்டி உற்சவர் சன்னதியிலிருந்து மாலை 5 மணிக்கு உற்சவர் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 7.30 மணிக்கு திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்திற்கு வருகின்றனர்.

அங்கு தெப்பத்தில் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து தெப்ப உற்சவம் கண்டருளுவர். பின்னர் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடைவர். தைத்தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வீதியுலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News