உள்ளூர் செய்திகள்
கட்டுப்பாட்டு பகுதி

சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி- கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 387 தெருக்கள் மூடப்பட்டன

Published On 2022-01-19 06:22 GMT   |   Update On 2022-01-19 08:06 GMT
சென்னையில் தற்போது 58 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 71 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

15 மண்டலங்களில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த நோய் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் 7 நாட்கள் கட்டாயம் தனிமைபடுத்தப்படுகிறார்கள். அவர்களை கண்காணிக்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும் டாக்டர்கள் குழு செயல்படுகிறது.

தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு உதவ களப்பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா தொற்று உறுதியானவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் ஒரே ஸ்டிக்கரில் அவர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்படுகிறது.

சென்னையில் தற்போது 58 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 71 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் கொரோனா பாதித்த தெருக்கள் மூடப்படவில்லை. ஆனால் தற்போது தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களை தடுப்பு வேலிகள் அமைத்து மூடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

சென்னையில் 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. இதில் 30 ஆயிரம் தெருக்களுக்கு மேலாக தொற்று பாதிப்பு உள்ளன. 3 முதல் 6 பேர் வரை பாதிக்கப்பட்ட தெருக்களாக 1,850-ம், 6 முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்ட தெருக்களாக 729-ம் உள்ளன.

10 பேர் முதல் 25 பேர் வரை அதிகம் பாதிப்புள்ள தெருக்களாக 387 கண்டறியப்பட்டுள்ளது. இந்த தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. அந்த தெருக்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு அந்த தெருக்களை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:-

சென்னையில் தொற்று பரவலை தடுக்க பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். வீட்டு தனிமையில் 41 ஆயிரம் பேர் உள்ளனர். 8 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவர்களை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு வீட்டிலேயே மருத்துவ குழுவினர் ஆக்சிஜன் அளவும், உடல் வெப்ப பரிசோதனை செய்து மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. அறிகுறி உள்ளவர்களை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டில் இருந்து பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை மருத்துவக் குழுவினர் டெலிபோன் மூலமாக பேசி ஆலோசனை வழங்குகிறார்கள். தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அழைப்புகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். இது தவிர நோய் அறிகுறி இருந்தால் பாராசிட்டமால், வைட்டமின் சி. ஜின்க் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

பரிசோதனை முடிவு வருவதற்குள்ளாக அவர்களுக்கு சிகிச்சை தொடங்கப்படுகிறது. மேலும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களுடன் வசிக்கும் உறவினர்கள் முறையாக முககவசம் அணியாததால் தொற்று அதிகம் பரவுகிறது. 30 சதவீதம் பேருக்கு இதன் மூலமாகவே பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களை இரண்டு முககவசம் அணிந்து உறவினர்கள் கையாளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News