ஆன்மிகம்
பால்குடம்- பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கொடுமுடி அருகே காளியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-03-26 07:13 GMT   |   Update On 2021-03-26 07:13 GMT
காளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தல், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தல், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்றனர்.

பின்னர் அங்கு புனிதநீராடி பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் பலர் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், பறவை காவடி எடுத்து வந்தும் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
Tags:    

Similar News