செய்திகள்
அல்-பாக்தாதி

அல் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐ.எஸ். அமைப்பு

Published On 2019-10-31 16:03 GMT   |   Update On 2019-10-31 16:03 GMT
அமெரிக்க ராணுவத்தினரால் அபுபக்கர் அல் பாக்தாதி சுட்டுக் கொல்லப்பட்டதை ஐ.எஸ் அமைப்பு இன்று உறுதிப்படுத்தியது.
பெய்ரூட்:

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த பயங்கரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்பதன் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.
 
இதன் முதல்கட்டமாக, 3 ஆண்டுகளுக்கு முன் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டிவிட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

இந்த ஆட்சியின் மன்னனாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி தன்னை 29-6-2014 அன்று பிரகடனப்படுத்தி கொண்டான்.

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மேலும் அழகிய இளம்பெண்களை கடத்திச் சென்று தங்களது பாலியல் தேவைக்கும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

மோசூல் நகரில் ஒரு தலைமையிடத்தை ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று சுருக்கிக் கொண்டனர். இதையடுத்து, அமெரிக்க விமானப்படை துணையுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தங்கள் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட ஈராக் அரசு தீர்மானித்தது.

இதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்கா மற்றும் ஈராக் படைகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இந்த போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து ரஷிய படைகளும் வான்வழி தாக்குதல்களை அவ்வப்போது நடத்தினர்.

மோசூல் நகர் அரசுப்படைகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து அங்கிருந்து தப்பிடோடிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக் நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலவனங்களில் தலைமறைவாக பதுங்கினர். ரஷியா, ஈராக் போன்ற நாடுகள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக பல முறை ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால், அவை எல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்களாகவே அமைந்திருந்தன.

இதற்கிடையே, ஐ.எஸ்.இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை ஐ.எஸ். அமைப்பு இன்று உறுதி செய்துள்ளது. 

பாக்தாதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஐ.எஸ் இயக்கத்தின் புதிய தலைவராக இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷியை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News