செய்திகள்
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய வேண்டும் -டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

Published On 2020-09-12 05:01 GMT   |   Update On 2020-09-12 07:33 GMT
மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் தவறிவிட்டதாகவும், அதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டுவிட்டரில் ஏராளமானோர் வலியுறுத்தி உள்ளனர்.
மும்பை:

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.

மும்பை பாந்திரா பாலி ஹில்லில் உள்ள கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி மாநகராட்சி இடித்து தள்ளியது.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை கங்கனா ரணாவத், “உத்தவ் தாக்கரே என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்? திரைப்பட மாபியா கும்பலுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும்” என ஆவேசமாக கூறியிருந்தார். கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், சிவ சேனாவுக்கு எதிராகவும், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும் இன்று டுவிட்டரில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். உத்தவ் தாக்கரே இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை (#UddhavResignNow) டிரெண்டாக்கி வருகின்றனர்.

கடற்படை முன்னாள் அதிகாரி தாக்கப்பட்டது தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

கங்கனா ரணாவத் கூறியது சரிதான், மாகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொடுமை அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, பொதுமக்கள் பாதுகாப்பாக இல்லை, அரசு தூங்கிவிட்டது என்றும், உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலர் கூறி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள நிலைமையை கட்டுப்படுத்த உத்தவ் தவறிவிட்டார், அவர் இன்னும் குழப்பத்திலேயே உள்ளார். எனவே, ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர். 


Tags:    

Similar News