ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் எழுந்தருளிய காட்சி.

சூரிய பிரபை, பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் வீதிஉலா

Published On 2021-03-09 05:51 GMT   |   Update On 2021-03-09 05:51 GMT
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளில் சூரிய பிரபை, பூத வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10.30 மணியளவில் சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது.

உலகுக்கு ஒளி வழங்கும் தேவனாக, பகவானாக திகழ்பவர் சூரியன். சிவனின் அம்சமே சூரியன். சூரிய மண்டலத்தின் மத்தியில் பிரம்மனாகவும், சந்திர மண்டலத்தின் நடுவே திருமாலாகவும், அக்னி மண்டலத்தின் நடுவே உருத்திரனாகவும் வீற்றிருந்து முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்து வருகிறார் சிவன்.

மூன்று மண்டலங்களுக்கு மத்தியில் சிவன் எட்டுக்கரங்களுடன் பார்வதியை இடப்பாகம் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக சூலத்தைச் சுழற்றி ஆடுகிறார். சிவன் ஆதியில் சூரிய மண்டலத்தின் நடுவில் ஆதி பிரம்மனாக வீற்றிருந்து உலகத்தை படைத்ததையும், அதன் நடுவில் நடனம் ஆடி காட்சியளித்ததையும் உணர்த்தவே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் எழுந்தருளினார்.

பின்னர் இரவு 9.30 மணியளவில் பூத வாகன வீதிஉலா நடந்தது. அனைத்துப் பூதங்களுக்கெல்லாம் தலைவனும், தலைவியுமாக சிவன், பார்வதி உள்ளனர். இவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான், தீயவையெல்லாம் தம் சக்திகளை அடக்கி கொண்டு இருக்கின்றன. சிவன், தாயாரை சரணடைந்தால் நமது மனதில் உள்ள தீய சக்திகளும், வெளியே உள்ள தீய சக்திகளும் அழிந்து நன்மை பயக்கும் என்பதை உணர்த்தேவ பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளினார்.

அதேபோல் கிளி வாகன வீதிஉலா நடந்தது. கிளி வாகனம் பெரும்பாலும் சிவன் கோவில்களில் அம்பாளுக்கு உரியதாகவே கருதப்படுகிறது. இலக்கியத்தில் கிளி காதல் தூதுவனாகக் கூறப்படுகிறது. கிளி எளிதில் மனிதர்களோடு பழகி தோழமைக் கொள்ளும் இயல்புடையது. பெண்கள் கிளியை பழக்கி தனக்கு துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். கிளி சுகத்தின் அடையாளம். நாம் வணங்கும் தெய்வங்களை நமக்கு இனிய சுகங்களை வழங்கி எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் அடையாளமாக கிளி வாகனத்தில் அம்பாளை அமர்த்தி உலா வரச் செய்கிறார்கள். கிளியின் மீது அமர்ந்து பவனி வரும் தாயாரை தொழுவதால் மனதில் இன்பம் பொங்கும். இல்லற வாழ்வில் சுகம் கூடும். எனவே பக்தர்களுக்கும், மக்களுக்கும் சுகமான வாழ்வு அமைய உற்சவர் ஞானப்பிரசுனாம்பிைக தாயார் கிளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags:    

Similar News