செய்திகள்
கடத்தல்

ஹைதியில் துணிகரம் - சிறுவர்கள் உள்பட 17 அமெரிக்கர்கள் கடத்தல்

Published On 2021-10-17 23:47 GMT   |   Update On 2021-10-17 23:47 GMT
ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் கூலிப்படையினரால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டபின் கடத்தல் கும்பல்களின் கைவரிசை மீண்டும் ஓங்கியுள்ளது.
போர்ட் அவ் பிரின்ஸ்:

கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து வருகிறது. எனினும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக கடந்த சில ஆண்டுகளாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன.

இந்நிலையில், ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வரும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் சிறுவர்கள் உள்பட 17 பேரை கடத்திச் சென்றது.

இச்சம்பவம் தொடர்பாக ஹைதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம் என போர்ட் அவ் பிரின்சில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கடத்தல்காரர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News