வழிபாடு
மேல்சாந்தி ஈஸ்வர நம்பூதிரி தலைமையில் சன்னிதானத்தில் களப கலச ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

சபரிமலைக்கு செல்ல 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-12-20 02:07 GMT   |   Update On 2021-12-20 02:07 GMT
மண்டல பூஜை நெருங்குவதையொட்டி சபரிமலைக்கு செல்ல தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் செல்லவும், நேரடி நெய் அபிஷேகத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போது தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்களும் ஐயப்ப சாமியை தரிசனம் செய்தனர். அதே சமயத்தில் மண்டல பூஜை நெருங்குவதையொட்டி கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் செல்லலாம். ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலையொட்டி இதுவரை நெய் அபிஷேகம் நேரடியாக நடைபெறவில்லை. இந்தநிலையில் பழைய நடைமுறைபடி ஐயப்பசாமிக்கு நேரடியாக நெய் அபிஷேகம் செய்யலாம். இனிமேல் பாரம்பரிய எரிமேலி காட்டுப்பாதை வழியாகவும் பக்தர்கள் செல்லலாம். இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய உத்தரவு அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News