வழிபாடு
முத்துமாரியம்மன்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2022-03-04 07:31 GMT   |   Update On 2022-03-04 07:31 GMT
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வருகிற 8-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வருகிற 16-ந்தேதி பால்குட ஊர்வலம் நடக்கிறது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வருகிற 8-ந்தேதி காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முன்னதாக வருகிற 6-ந்தேதி மாலை சுமங்கலி பூஜை நடக்கிறது. வருகிற 8-ந்தேதி காலை கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதன் பின்னர் அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சியும் பின்னர் அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள்.

தொடர்ந்து தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வருகிற 15-ந்தேதி மாலை கரகம், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி முத்தாலம்மன் கோவிலில் இருந்து எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா 16-ந்தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் அன்றைய தினம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக காணப்படுவார்கள். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கரகம் பருப்பூரணிக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியும், வருகிற 17-ந்தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுமதி தலைமையில் கோவில் கணக்கர் பாண்டி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News