செய்திகள்
டெங்கு காய்ச்சல்

நெல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிக்கு டெங்கு காய்ச்சல்

Published On 2021-10-19 10:27 GMT   |   Update On 2021-10-19 10:27 GMT
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 3 முதல் 5 பேர் வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வெகுவாக குறைந்து விட்டது. புறநகர் மட்டுமல்லாது மாநகர பகுதியிலும் அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று மாவட்டத்தில் மொத்தம் 6 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பெரும்பாலான பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீரை மூடி வைக்காமல் திறந்து வைப்பதால் டெங்கு கொசுக்கள் மூலம் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 3 முதல் 5 பேர் வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதார துறையை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று வந்த அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது.

இதனால் 2 நாட்களுக்கு முன்பு அவர் டெங்கு பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வசித்த தெருக்களில் டெங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தூய்மை பணியாளர்களும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு உருவாக காரணமான டயர் கழிவுகளை அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News