செய்திகள்
கொலைசெய்யப்பட்ட இந்திரா

விழுப்புரத்தில் பெண் கொலை- ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கைது

Published On 2019-12-11 05:29 GMT   |   Update On 2019-12-11 05:29 GMT
முதல் மனைவியை கொலைசெய்து விட்டு நாடகமாடிய ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ்நிலையம் எதிரில் சுதாகர் நகர் கரிகாலன் தெருவில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 60). இவர் திருக்கோவிலூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

இவருக்கு 2 மனைவிகள் முதல் மனைவி இந்திரா (56), 2-வது மனைவி லீலா. இவர் திருக்கோவிலூர் பள்ளில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வேலாயுதம் (23) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

நடராஜனின் முதல் மனைவி இந்திரா விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அதிகாலையில் கொலை செய்யப்பட்டு உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வட்டிக்கு பணம் கொடுத்த தகராறில் இந்திரா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொலையில் துப்புதுலக்க இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இந்திராவின் கணவர் நடராஜன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நடராஜனிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவி இந்திராவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதை தொடர்ந்து நடராஜனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள நடராஜன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு :-

நான் கடந்த 1986-ம் ஆண்டு திருத்தணி அருகே உள்ள கனகம்மாள் சத்திரம் அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தேன். அதே பள்ளியில் லீலா என்பவர் பணிபுரிந்து வந்தார். அப்போது எனக்கும் லீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார காதலித்து வந்தோம். இந்த விபரம் எனது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு எனது பெற்றோர் இந்திரா என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் லீலாவின் மீது இருந்த மோகத்தால் இந்திராவை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. எனக்கும் இந்திராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நான் வீட்டில் யாருக்கும் தெரியாமல் லீலாவை திருப்பதிக்கு அழைத்து சென்றேன். அங்கு வைத்து அவரை நான் திருமணம் செய்து கொண்டேன். இந்த விபரம் எனது முதல் மனைவி இந்திராவுக்கு தெரியவந்தது.

அவர் என்னிடம் தகராறு செய்து வந்தார். நாளடைவில் சமாதானம் ஆகிவிட்டார். அதன் பின்பு நான் 2 மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தேன். முதல் மனைவி இந்திராவுக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்தான். அவன் கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வந்தான். அவன் சரியாக படிக்க மாட்டான். இதனால் அவனை நான் திட்டினேன். இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீராம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான், அதன் பிறகு எனக்கும் இந்திராவுக்கும் இடையே தகராறு முற்றியது.

இதன் காரணமாக இந்திரா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்பு அவரது பெற்றோர் அவரை தேடி கண்டுபிடித்து விழுப்புரம் அழைத்து வந்து என்னிடம் ஒப்படைத்தனர்.

நான் அடிக்கடி திருக்கோவிலூரில் உள்ள 2-வது மனைவி லீலாவை பார்க்க சென்று வந்தேன். அப்போது இந்திரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அடிக்கடி எனக்கு அதிக தொல்லை கொடுத்ததால் இந்திரா மீது எனக்கு கோபம் ஏற்பட்டது.

இந்திரா உயிருடன் இருந்தால் நான் லீலாவுடன் நிம்மதியாக இருக்க முடியாது என கருதினேன். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதனை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி இரவு எனக்கும் இந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்பு இந்திரா ஒரு அறையில் படுத்து தூங்கினார்.

எனக்கு உறக்கம் வரவில்லை. 2 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்தேன். பின்பு இந்திரா படுத்திருந்த அறைக்கு சென்று அங்கு தூங்கி கொண்டிருந்த இந்திராவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

இதை தொடர்ந்து தடயத்தை மறைக்க இந்திராவின் முகம் மற்றும் உடலில் பழைய துணிகளை போட்டு மண்எண்ணை ஊற்றி தீவைத்து எரித்தேன் தீயில் அவள் உடல் கருகியது.

இதன் பின்பு நான் வீட்டை பூட்டிவிட்டு திருக்கோவிலூரில் உள்ள 2-வது மனைவி வீட்டுக்கு சென்று விட்டேன். அதன்பின்பு 7-ந்தேதி காலையில் வீட்டுக்கு வந்தேன். ஒன்றும் தெரியாதது போல் மனைவி இந்திராவை யாரோ அடித்து கொலை செய்திருப்பதாக போலீசில் புகார் செய்து நாடகம் ஆடினேன்.

ஆனால் போலீசார் என்னை பிடித்து விசாரணை நடத்தியதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடராஜன் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் மண்எண்ணை பாட்டிலை போலீசார் கைப்பற்றினர்.

அதன் பின்பு நடராஜனை போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர், அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அதன் பின்பு நடராஜன் விழுப்புரம் அருகே உள்ள வேடப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல் மனைவியை கொலைசெய்து விட்டு நாடகமாடிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News