ஆன்மிகம்
கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Published On 2020-08-01 07:11 GMT   |   Update On 2020-08-01 07:11 GMT
ஆடிவெள்ளியையொட்டி கோவையில் அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தியுடன் பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஆடி வெள்ளியையொட்டி கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் அம்மனுக்கு பால், பழம், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அதிகாலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் யாரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, கோவில் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி அம்மனை வணங்கி சென்றனர்.

கோவை ராஜசெட்டி வீதியில் உள்ள வன பத்ரகாளியம்மனுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் நாடார் வீதியில் உள்ள அம்மனுக்கு பாலம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஒரு சில பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அம்மனை வணங்கி சென்றனர்.

இதேபோல் காட்டூர் மணிமுத்து மாரியம்மன், காந்திபுரம் சமயபுரம் சக்தி மாரியம்மன், டி.கே. மார்க்கெட் பிளேக் மாரியம்மன், ஆடிஸ் வீதியில் உள்ள அம்மன் கோவில், புலியகுளம் வனபத்தரகாளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் நேற்று ஆடிவெள்ளியை யொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

அதுபோன்று கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சோமனூரில் உள்ள ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய அபிஷேகங்கள் நடந்தன.

தொடர்ந்து மகாதீபாராதனையும் நடந்தது. அதிகாலையில் இருந்தே பக்தியுடன் பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

வரலெட்சுமி நோன்பையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விரதம் இருந்து, சுமங்கலி பூஜை செய்தனர். இதற்கு தேவையான பொருட்கள் வாங்கி, அம்மனுக்கு படைத்து பூஜை செய்து வழிபட்டனர். 
Tags:    

Similar News