செய்திகள்
விசைத்தறி கூடங்களுக்கு சீல்

ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 விசைத்தறி கூடங்களுக்கு சீல்

Published On 2021-06-08 09:28 GMT   |   Update On 2021-06-08 09:28 GMT
7 விசைத்தறி கூடங்கள் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்ததோடு தொழிலாளர்கள் முககவசம் இன்றி பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் தவிர மற்ற அனைத்தும் தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் 10 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே விசைத்தறி உரிமையாளர்கள் தாமாக முன்வந்து உற்பத்தியை நிறுத்தினர்.

ஒரு சில விசைத்தறி கூடங்கள் மட்டும் செயல்பட்டு வந்தது. பின்னர் அரசு ஊரடங்கு அறிவித்த பிறகு முழுமையாக மூடப்பட்டன. ஈரோட்டில் பெரியசேமூர், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் பெரிய சேமூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 7 விசைத்தறி கூடங்கள் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்ததோடு தொழிலாளர்கள் முககவசம் இன்றி பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 7 விசைத்தறி கூடங்களுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததோடு அபராதமும் விதித்தனர். இந்நிலையில், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் விசைத்தறிகள் மற்றும் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News