செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு

Published On 2021-07-14 09:38 GMT   |   Update On 2021-07-14 09:38 GMT
டெல்லியில் தடுப்பூசி கையிருப்பு இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே வரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் டெல்லி நகரில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல மையங்கள் நேற்று மூடப்பட்டன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கப்பட்டது.

முதலில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வரை கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே பெருமளவில் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்னும் முழு அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனை உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மாநிலங்களில் தடுப்பு மருந்து இல்லாததால் மையங்கள் மூடப்பட்டன.

தடுப்பு மருந்து உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டதால் பற்றாக்குறை நிலவியது. இதை தீர்க்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்ட மத்திய அரசு தடுப்பூசியில் புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டது.

அதன்படி மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை இலவசமாக விநியோகிக்கும் என்று அறிவித்தது. இந்த புதிய கொள்கை திட்டம் ஜூன் 21-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை விநியோகம் செய்து வந்தது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா 2-வது அலை தாக்கம் காரணமாக மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்வதில் விழிப்புணர்வு உண்டானது. இதையடுத்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மாநிலங்கள் தங்களிடம் தடுப்பு மருந்து டோஸ்கள் இல்லை என தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கொள்கை திட்டத்தின் முதல் நாளான ஜூன் 21-ந்தேதி நாடு முழுவதும் கிட்டதட்ட 91 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டன. ஜூன் 27-ந்தேதி வரை 7 நாட்களில் 4 கோடி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டன.

அதன்படி அந்த ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 60 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால் அதன்பின் தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்து கொண்டே வந்தது. ஜூலை 5-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை 2.3 கோடி டோஸ்களே செலுத்தப்பட்டன.

வாரந்தோறும் தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டதில் தற்போது 60 சதவீதம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் தடுப்பு மையங்களிலும் கூட்டம் நீண்ட வரிசையில் நிற்பதை காண முடிகிறது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதனை தீர்க்க வேண்டும் என்று பல மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு தடுப்பு மருந்து இல்லை என்ற வாசகங்கள் எழுதி போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு இதுவரை 1.67 கோடி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 1.66 கோடி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதையடுத்து நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “எங்களுக்கு கிட்டதட்ட 11.5 கோடி டோஸ்கள் தேவை. இதுவரை 1.67 கோடி டோஸ்களை பெற்று இருக்கிறோம். இன்னும் 10 கோடி டோஸ்கள் தேவை உள்ளது. தடுப்பூசிகளை பெற அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.” என்றார்.

கொரோனா பாதிப்புக்கு அதிகம் உள்ளான மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 3.7 கோடி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு தினமும் 15 லட்சம் டோஸ்கள் நிர்வகிக்க முடியும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதையடுத்து அப்பணியை தொடர முடியவில்லை. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் கூறும் போது, “கடந்த வாரம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தது. ஆனால் அது 3 நாட்களில் தீர்ந்து விட்டது” என்றார்.

கர்நாடகாவில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும், முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் இடையிலான இடைவெளி 23 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த 3 மாதங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு 2-வது டோஸ் போட்டுக் கொள்வதற்கான மருந்துகள் இன்னும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் தடுப்பூசி மையங்களில் சில நாட்களாக கோவேக்சின் தடுப்பூசி முற்றிலுமாக இல்லை. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை தரப்பில் கூறும்போது, சில வாரங்களுக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்கப்படுத்தி வந்தோம். தற்போது பற்றாக்குறை நிலவுவதால் அதனை செய்ய முடியவில்லை. தடுப்பூசியின் பெரும் பங்கு எப்போது கிடைக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை என்று கூறினர்.

கேரளாவிலும் தடுப்பூசி விநியோக தேவையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் தடுப்பூசி கையிருப்பு இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே வரும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால் டெல்லி நகரில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல மையங்கள் நேற்று மூடப்பட்டன.

அதே போல் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்த மத்திய அரசு அதற்கு தினமும் குறைந்தபட்சம் 80 லட்சம் டோஸ்களை நிர்வகிக்க வேண்டும். ஆனால் தற்போது தடுப்பூசிக்கு மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News