செய்திகள்
இறந்த வடிவேல்முருகன், பங்கஜம், மாலா.

கணவர் இறந்ததால் மகளுடன் பெண் தற்கொலை

Published On 2020-09-16 02:12 GMT   |   Update On 2020-09-16 02:12 GMT
நாகர்கோவிலில் குடும்ப வறுமையால் கணவர் இறந்ததும், குளத்தில் குதித்து மகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே சுசீந்திரம் நல்லூரில் உள்ள இளையநயினார் குளத்தில் நேற்று அதிகாலை 3 பெண்கள் தண்ணீரில் மிதந்தனர். போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது அவர்களது கைகள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தன. அவர்களில் 2 பேர் இறந்து இருந்ததும், ஒருவர் மட்டும் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது. போலீசார் உயிருக்கு போராடியவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் 2 உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நாகர்கோவில் ஒழுகினசேரியை சேர்ந்த தச்சு தொழிலாளி வடிவேல் முருகன் (வயது 78). இவரது மனைவி பங்கஜம் (70). இவர்களது மகள்கள் மாலா (46), சச்சு என்ற மைதிலி (வயது 45). போதிய வருமானம் இல்லாததால் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு வந்துள்ளனர். 2 மகள்களும் திருமணம் செய்யாமல் பெற்றோருடன் வாழ்ந்து வந்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வடிவேல்முருகனுக்கு திடீரென்று காலில் அடிபட்டது. வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்த அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென இறந்து விட்டார். கணவர் இல்லாத உலகத்தில் நாமும் இருக்க வேண்டாம் என்று நினைத்து, 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள பங்கஜம் முடிவு செய்தார்.

இறந்த வடிவேல்முருகனின் உடலை வீட்டுக்குள்ளேயே போட்டு விட்டு, ஒரு கயிற்றால் 3 பேரின் கைகளையும் ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு குளத்துக்குள் குதித்தனர். இதில் பங்கஜமும், மாலாவும் இறந்து விட்டனர். மைதிலி மட்டும் உயிர் தப்பிவிட்டார்.

மைதிலி கூறிய தகவலை தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து வடிவேல்முருகன் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப வறுமையால் கணவர் இறந்ததும், குளத்தில் குதித்து மகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News