செய்திகள்
பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு- 72 சதவீதம் மாணவ, மாணவிகள் வருகை

Published On 2021-01-20 04:54 GMT   |   Update On 2021-01-20 04:54 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடத்துக்கு 72 சதவீதம் மாணவ-மாணவிகள் வந்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. படிப்படியாக பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கி உள்ளது. பள்ளிக்கூடங்களை திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 87 அரசு பள்ளிகள், 126 அரசு உதவி பெறும் பள்ளிகள், 97 மெட்ரிக் பள்ளிகள், 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஆக மொத்தம் 328 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று காலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதில் மொத்தம் 316 பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டன. அதேபோன்று 12 பள்ளிக்கூடங்களில் மழை நீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் திறக்கப்படவில்லை. சில பள்ளிக்கூடங்களில் மழைநீர் தேங்கி இருந்தாலும் மாற்று கட்டிடத்தில் இயங்கின.

நேற்று மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 15 ஆயிரத்து 48 பேரும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 17 ஆயிரத்து 746 பேரும் பள்ளிக்கு வருகை தந்தனர். இது 72 சதவீதம் ஆகும்.

நேற்று காலை முதல் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்கள் சைக்கிள், பஸ்களில் வந்தனர். தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய ரகுமத்நகர் பகுதியில் உள்ள மாணவர்கள் படகு மூலம் வெளியில் வந்து பள்ளிக்கூடத்துக்கு சென்றனர்.

அவர்களுக்கு பள்ளிக்கூட வாசலில் ஆசிரியர்கள் கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும், முக கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தினர். வகுப்பறையில் ஒரு பெஞ்சில் 2 மாணவர்கள் மட்டுமே உட்கார வைக்கப்பட்டனர். மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்தையும் கொண்டு வந்தனர். 10 மாதங்களுக்கு பிறகு வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதால், மாணவர்களை தயார் செய்யும் வகையில் ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். மாணவ, மாணவிகளுக்கு சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News