வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்திய போது எடுத்த படம்.

மண்டைக்காடுபகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா 27-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-02-21 07:55 GMT   |   Update On 2022-02-21 07:55 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கொடியேற்றுதல், மதியம் 1 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.

திருவிழாவில் 3-வது நாள் முதல் 9-வது நாள் வரை காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், 6-ம் நாள் விழாவில் நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை, 9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியுடன் பெரிய சக்கர தீவெட்டி பவனி போன்றவை நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான மார்ச் 8-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் பவனி, அதிகாலை 4.30 மணி முதல் மாலை 5 மணி வரை அடியந்திரபூஜை, குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடர்ந்து கொடி இறக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா நடக்கும் 10 நாட்களும் கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 85-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. முதல் நாளில் மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம் போன்றவை நடைபெறும்.

தொடர்ந்து சமய மாநாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் திறந்து வைத்து உரையாற்றுகிறார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 6 மணிக்கு ராஜராஜேஸ்வரி பூஜை, திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம் போன்றவை நடைபெறும்.

தொடர்ந்து வருகிற நாட்களில் கம்பராமாயண விளக்கவுரை, இசை சொற்பொழிவு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

10-ம் நாள் மாலை 4 மணிக்கு நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சியில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை இந்த அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே மாசிக்கொடை விழா தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள். நேற்று ஏராளமான கேரள பெண் பக்தர்கள் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். இதனால், மண்டைக்காடு கோவில் மாசிக்கொடை இப்போதே களைக்கட்ட தொடங்கி உள்ளது.
Tags:    

Similar News