செய்திகள்
முகிலன்.

தமிழக மண்ணின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்- முகிலன் ஆவேசம்

Published On 2019-07-29 15:01 GMT   |   Update On 2019-07-29 15:01 GMT
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன், தமிழக மண்ணின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன் என்று கரூர் கோட்டில் ஆஜரான முகிலன் கூறியுள்ளார்.
கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சமூக ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக முகிலன் மீது அரவக்குறிச்சி போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்தனர்.  அந்த வழக்கு கரூர் ஜே.எம்.1 கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் இன்று முகிலன் ஆஜரானார். இதற்காக அவரை திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் கரூர் அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜரான முகிலனிடம் நீதிபதி விஜயகார்த்திக் விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். 

முன்னதாக கோர்ட்டில் ஆஜராக வந்த முகிலன் , வேனில் இருந்து இறங்கியதும் திடீரென பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில்:-

இந்திய மக்களை கொலை செய்த  நரேந்திர மோடி நாட்டின் பிரதமராம். தமிழகத்தை டெல்லியில் அடமானம் வைத்து கோடி கோடியாக கொள்ளையடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராம். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக போராடுபவன் தேச துரோகியாம். தமிழக மண்ணின் உரிமையை காக்க இது போன்ற குற்றங்களை தொடர்ந்து செய்வேன். அரசின் அடக்குமுறையை கண்டு அஞ்சமாட்டேன். எந்த நெருக்கடி கொடுத்தாலும் எதிர்கொள்வேன் என்றார். 
Tags:    

Similar News