செய்திகள்
மரணம்

குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் பலி

Published On 2021-04-06 12:37 GMT   |   Update On 2021-04-06 12:37 GMT
வாக்குச்சாவடி வளாகத்தில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்து, வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது 58). இவர், பழனி வட்டார கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார்.

இவருக்கு, நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோசுகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அலுவலராக தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது.

அந்த பள்ளியில் மொத்தம் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சம்பந்தம் உள்பட 16 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையிலேயே வாக்குச்சாவடி அமைந்துள்ள அரசு பள்ளிக்கு சம்பந்தம் வந்து விட்டார். இரவில் பள்ளியில் உள்ள அறையிலேயே தங்கினார்.

நேற்று காலை இவர், வாக்குச்சாவடி வளாகத்தில் உள்ள குளியல் அறையில் குளித்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது திடீரென வழுக்கி விழுந்து மயக்கம் அடைந்தார்.

இதனைக்கண்ட சக ஊழியர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக வாக்குச்சாவடிக்கு எதிரே உள்ள அரசு ஆரம்ப நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சம்பந்தம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாரடைப்பால் அவர் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தத்தின் உடல், பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்குச்சாவடி வளாகத்தில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்து, வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சம்பந்தத்துக்கு பதிலாக வேறு ஒருவர், வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு பணி தொடங்கி தடையின்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News