செய்திகள்

குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

Published On 2019-05-11 18:24 GMT   |   Update On 2019-05-11 18:24 GMT
மகுடஞ்சாவடி, கோணங்கியூரில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் கடந்த 20 நாட்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை.

குடிநீர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் அந்த பகுதி மக்கள் மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், போதிய குடிநீர் வசதி செய்யுமாறு கேட்டு இருந்தனர். ஆனாலும் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப் படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் நேற்று மதியம் மகுடஞ்சாவடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மகுடஞ்சாவடி-கொங்கணாபுரம் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொங்கணாபுரத்தை அடுத்த கச்சுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோணங்கியூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கொங்கணாபுரம் ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டைமேடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் ஆகியோர் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், உடைப்பு சரிசெய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. அதனை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்கப்படும் என்றும் கூறினர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News