செய்திகள்
முக ஸ்டாலின்

முதல்-அமைச்சர் ஆகாததால் ஆத்திரப்படவில்லை- மு.க.ஸ்டாலின்

Published On 2019-12-02 06:08 GMT   |   Update On 2019-12-02 06:08 GMT
முதல்-அமைச்சர் ஆகாததால் ஆத்திரப்படவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை. பேராவூரணி ஒன்றியங்களைச் சேர்ந்த 500 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது.

அதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஆளுங்கட்சிக்கு சென்றால் பதவி கிடைக்கும், வசதி கிடைக்கும் என்றெல்லாம் திட்டம் போடக்கூடிய சூழ்நிலை இன்று நிலவிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இன்றைக்கு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.வில் வந்து இணைந்திருக்கிறீர்கள் என்றால், இந்த தி.மு.க. ஆளும் கட்சியாக உருவாகப் போகிறது.

1989-ம் ஆண்டு நானும் எம்.எல்.ஏ. ஆனேன். எடப்பாடி பழனிசாமியும் எம்.எல்.ஏ. ஆனார். இருவரும் ஒரே சமயத்தில் எம்.எல்.ஏ. ஆகியும் அவர் இன்று முதலமைச்சர் ஆகிவிட்டார். நான் ஆகவில்லை என ஆத்திரப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

காலில் விழுந்து அந்த பதவியைப் பெற்றுவிட்டு பேசுகிறார் பழனிசாமி. இதைச் சொன்னால் நான் பொய் பேசுவதாக கூறுகிறார். பாராளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 இடங்களில் நின்றோம். 40-ல் 39 இடங்களில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளோம்.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதையும் ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொண்டோம். நாம் அந்த தோல்வியை ஏற்றுக்கொண்டோம். தோல்விக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான பணிகளை மேற் கொண்டுள்ளோம். வெற்றி, தோல்வியை மக்களின் தீர்ப்பு மகேசனுடைய தீர்ப்பு என தி.மு.க. எப்போதும் ஏற்றுக்கொள்ளும்.



உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டு மூன்று வருடமாக அ.தி.மு.க. ஆட்சி நடத்தாமல் உள்ளது. ஆனால், தி.மு.க.,தான் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கியதாக சொல்கிறார்கள். தி.மு.க. எதை நினைத்தாலும் செய்யும் என்றால், தி.மு.க.,தானே பெரிய கட்சி என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் அப்படித்தானே? அப்படியென்றால், தி.மு.க. நினைத்தால்தான் தேர்தல் நடத்த முடியுமா?

இட ஒதுக்கீடு செய்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும், பொது, பட்டியலின - பழங்குடியினத்தவருக்கென இடங்கள் ஒதுக்கீடு செய்ய கணக்கெடுத்து தேர்தலை அறிவிக்க வேண்டும். அதை இந்த அரசு முறையாக செய்யவில்லை. அதேபோல் மேயர் யார், ஆணா - பெண்ணா, பட்டியலினத்தவருக்கு ஒதுக்குகிறார்களா? என்பன உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளது.

இதைத்தான் பல முறை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். அங்கு பதில் இல்லாததால் நீதிமன்றத்திற்கு சென்றோம். இதையடுத்து உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் பலமுறை தெளிவாக உத்தரவு போட்டுள்ளது. ஆகவே, தேர்தலை நிறுத்த வேண்டும் என தி.மு.க. சொல்லவில்லை.

தேர்தலை நிறுத்த வேண்டும் என தி.மு.க. நினைத்திருந்தால், அதுவும் பாராளுமன்ற எதிர்க் கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க. 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி இருக்காது. ஊராட்சி சபைக் கூட்டத்தை ஆளுங்கட்சிதான் நடத்த வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி நடத்தி உள்ளது. நாங்கள் மக்களிடம் சென்று குறைகளைக் கேட்டுள்ளோம். அவற்றை எல்லாம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தவுடன் தி.மு.க. செய்து முடிக்கும்.

இந்த இயக்கம் வாழ வேண்டும் என்று சொன்னால், நமக்காக இல்லை; நம்முடைய எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டிலே நலமுடன் இருக்க வேண்டும். நம்முடைய இயக்கம் வாழ வேண்டும், வளர வேண்டும் அதற்கு நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Tags:    

Similar News