செய்திகள்
இஸ்ரேல் பிரதமர் - மொஹ்சென் பக்ரிசாதே - ஈரான் அதிபர்

அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலை குற்றம் சுமத்தும் ஈரான் - பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை

Published On 2020-11-28 12:42 GMT   |   Update On 2020-11-28 12:42 GMT
ஈரான் நாட்டின் மூத்த அணுவிஞ்ஞானி நேற்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரான்:

ஈரான் நாட்டின் மிக மூத்த அணு விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தவர் மொஹ்சென் பக்ரிசாதே. ஈரான் அணு குண்டின் தந்தை என்ற வர்ணிக்கப்பட்ட இவர் அந்நாட்டின் ரகசிய அணு ஆயுத திட்டத்திற்கு மூலக்காரணமாக இருந்தார். 

இதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள  அப்சர்ட் என்ற நகரில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த மொஹ்செனை குறிவைத்து மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மொஹ்சென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மொஹ்சென் பக்ரிசாதே உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், இந்த கொலைக்கு உரிய நேரத்தில் தக்கபதிலடி கொடுக்கப்பட்டு பழிதீர்க்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஈரான் அதிபர் ரவுகானி கூறியதாவது:-

ஜியோனிச அரசின் (இஸ்ரேல்) கூலிப்படையினர் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள்.

சரியான நேரத்தில் இந்த குற்றச்செயலுக்கான பதிலடி கொடுக்கப்படும்.

அமெரிக்காவின் கூலிப்படை போன்று இஸ்ரேல் செயல்படுகிறது.

என்றார்.

தற்போது கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே 2008 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்தது.

மேலும், மெஹ்சென் பக்ரிசாதேவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘ஈரான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை’ என கூறியிருந்தார்.

இதற்கிடையில், மெஹ்சென் பக்ரிசாதேவை கொன்றது இஸ்ரேல் தான் என அமெரிக்க உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News