செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்பில் விவசாயிகள் 18-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம்

Published On 2020-10-11 12:53 GMT   |   Update On 2020-10-11 12:53 GMT
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டம் 18-வது நாளை எட்டியுள்ளது.
சண்டிகர்:

விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் 20-ம் தேதி 3 வேளாண் மசோதாக்களையும் மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்ப்பப்பட்டது. அந்த மசோதாக்களுக்கு கடந்தமாதம் 27-ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, வேளாண் மசோதாக்கள் சட்டமாக மாறியுள்ளது. 

இதற்கிடையில், வேளாண் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

தற்போது இந்த மசோதாக்கள் சட்டமாக மாறியுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றன. 

கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய பஞ்சாப் விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் இன்று 18-வது நாளை எட்டியுள்ளது. 18 நாட்களாக தொடர்ந்து போராடிவரும் விவசாயிகள் வேளாண் மசோதாக்களை அரசு திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News