வழிபாடு
சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

பக்தி முழக்கத்துடன் கொரோனா காலத்திலும் சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-01-27 05:51 GMT   |   Update On 2022-01-27 05:51 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு 130 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
நிலமகள் பச்சை பட்டு உடுத்தியது போன்ற அடர்ந்து படர்ந்த இயற்கை வனப்பை கொண்டது கேரள தேசம். பார்ப்போரின் கண்களை கொள்ளையடிக்கும் அனைத்து அம்சங்களும் கொட்டிக்கிடக்கும் சொர்க்கபூமி என்றும் சொல்லலாம். அதனால் தான் இன்றைக்கும் அது கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படுகிறது.

உல்லாசமாக படகு சவாரி செய்ய வேண்டுமா?, கடற்கரையில் படுத்து சூரிய குளியலை கொண்டாட வேண்டுமா?, உயர்ந்து நிற்கும் அணைகளை பார்க்க வேண்டுமா?, கண்ணையும், உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண தோட்டங்களை பார்க்க வேண்டுமா? அனைத்தையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது கேரளா.

அருளைத்தரும் தேசம்

அப்படிப்பட்ட கேரளாவில்தான் அனைத்து பக்தர்களையும் அன்போடு அழைக்கும் சுவாமி ஐயப்பனும் குடிகொண்டுள்ளார். அதனால் சுவாமி ஐயப்பனின் அள்ள அள்ள குறையாத அருளைத்தரும் தேசமாகவும் கேரளா இருந்து கொண்டிருக்கிறது.

கொச்சின் தேவஸ்தானம், குருவாயூர் தேவஸ்தானம், கூடல்மாணிக்கம் தேவஸ்தானம், மலபார் தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்தானம் என 5 தேவஸ்தானங்கள் உள்ளன. கொச்சின் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 450 கோவில்கள் செயல்பட்டு வருகிறது. குருவாயூர் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 13 கோவில்களும், கூடல் மாணிக்கம் தேவஸ்தானத்தின் கீழ் 11 கோவில்களும், மலபார் தேவஸ்தானத்தின் கீழ் 1400 கோவில்களும் உள்ளன.

தேவதை கோவில்கள்

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் 1250 கோவில்கள் உள்ளன. இவற்றில் சிவன் கோவில்கள் -312, மகாவிஷ்ணு மற்றும் கிருஷ்ணன் கோவில்கள்- 212, தேவி கோவில்கள்- 388, சபரிமலை உட்பட ஐயப்பன் கோவில்கள்-195, கணபதி கோவில்கள் -32, சுப்பிரமணியசாமி கோவில்கள் -35, ராமர்-லெட்சுமணர் கோவில்கள்-7, நரசிங்கமூர்த்தி கோவில்கள்-8, சரஸ்வதி தேவி கோவில்கள் -2 மற்றும் பிற தேவதை கோவில்கள் 59 உள்பட 1250 கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களின் வருமானம் அடிப்படையில் 237 கோவில்கள் முதன்மை பட்டியலிலும், 479 கோவில்கள் இரண்டாவது பட்டியலிலும், 482 கோவில்கள் 3-வது பட்டியலிலும் இணைக்கப்பட்டு உள்ளது.

முதல் பட்டியலில் உள்ள கோவில்களில் தினசரி 3 வேளைகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இரண்டாவது பட்டியலில் உள்ள கோவில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 2 வேளைகளில் மட்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 3-வது பட்டியலில் உள்ள கோவில்களில் ஒரு முறை மட்டுமே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

130 நாட்கள் திறந்திருக்கும்

இவற்றில் மிக முக்கிய முதன்மையான கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. சர்வதேச புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு நிகரான தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது உண்டு. அது மட்டுமின்றி ஆண்டு திருவிழா 10 நாட்கள், ஓணம், விஷு பண்டிகை என சிறப்பு தினங்களுக்கும் திறக்கப்படும். அதன்படி ஆண்டுக்கு 130 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நாட்களில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருமுடி கட்டி வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. நெய்யபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக வழிபாடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படுகிறது. கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து ஐயப்ப பக்தர்கள் இந்த பூஜை வழிபாடுகளை நடத்துகிறார்கள்.

ஆன்லைன் முன்பதிவு

ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம், அரவணை வழங்கப்படுகிறது. அங்குகிடைக்கும் அரவணையும், அப்பமும் சுவையின் உச்சம் என்றே சொல்லலாம். அது ஐயப்பனின் அருள் பிரசாதம் என்பதால் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது அவற்றை வாங்கி செல்வதை ஒரு சம்பிரதாயமாகவே கொண்டுள்ளனர். அந்த பிரசாதத்தை கொண்டு வந்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது.சபரிமலையில் கடந்த 10 ஆண்டுகளாக சாமி தரினத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவு முறைப்படி வரும் ஐயப்ப பக்தர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு, விரைவு தரிசனத்திற்கான வசதிகள் இதன் மூலம் பக்தர்களுக்கு கிடைக்கிறது. முன்பதிவு செய்யும் பக்தர்கள், வழக்கமான பாதையல்லாமல் தனிவரிசையில் தாமதம் இல்லாமல் தரிசனம் செய்யலாம். இது பக்தர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. இந்த வசதியினை கேரள போலீசார் தங்களது நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்தி வருகிறார்கள்.

ரூ.200 கோடிக்கு மேல் சேதம்

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் இந்த ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை பக்தர்களின் வருகையை பல்வேறு வகைகளில் கண்காணிக்க போலீசாருக்கு உதவிகரமாக இருந்தது. சபரிமலை கோவிலின் நடை வருமானத்தை வைத்துதான் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பெரும்பாலான கோவில்களில் அன்றாட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தது.

2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சுமார் ரூ.200 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக அப்போது கணக்கிடப்பட்டது. அதை தொடர்ந்து, பம்பையில் கட்டிடங்கள் கட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடைகள் மூலமாக கிடைக்கும் வருமானம் பெருமளவு குறைந்தது.

அதற்கு அடுத்ததாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொேரானா என்ற கண்ணுக்கு தெரியாத அரக்கனின் விஸ்வரூப ஆட்டம் ஆரம்பமானது. அது மனித இனத்தை குறிவைத்து உயிர்களை பறித்துக்கொண்டிருந்தது. அதில் இருந்து தப்பிக்க ழுழு ஊரடங்குகள் போடப்பட்டன. அப்போது மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் கோவில்களும் மூடப்பட்டன. அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினார்கள். கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. பக்தர்களால் நிரம்பி வழிந்த கோவில்கள் பக்தர்கள் இல்லாமல் காட்சி அளித்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரண கோஷம்

அது சபரிமலையிலும் எதிரொலித்தது. அங்கு தரிசனத்திற்காக பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற தலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அந்த நிலை படிப்படியாக மாறி தற்போது பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் இருந்தும் கடும் விரதமிருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு பெருவழிபாதை வழியாகவும், பம்பையில் இருந்தும் நடந்து சென்று அய்யன் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார்கள். அதனால் இந்த முறை சபரிமலையில் சுவாமியே சரணம் ஐயப்பா... என்ற சரணகோஷம் விண்ணை பிளந்தது என்றால் மிகையில்லை.

கடன் எடுக்க வேண்டிய நிலை

இது குறித்து தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்ததாவது:-

2019-2020-ம் ஆண்டு சீசனில் சபரிமலை நடை வருமானம் ரூ.269 கோடியாக இருந்தது. இந்த நிலையில், கொரோனா பேரிடர் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2020-2021-ம் ஆண்டு சீசனில் தினசரி 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல, மகர விளக்கு நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்காரணமாக பக்தர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் நடை வருமானம் ரூ.21 கோடியாக குறைந்தது. அதாவது முந்தைய ஆண்டை விட 92 சதவீத வருமானம் குறைந்து போனது. சீசன் நாட்களில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அன்றாட செலவு ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சமாக இருந்து வந்தது. இந்த நிலையில், வருமானம் குறைந்ததால், அன்றாட செலவுக்கு கூட கடன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 2 கட்டமாக கேரள அரசு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.50 கோடி வழங்கியது. மேலும் கோவிலுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி மதிப்பிலான நகைகள் பாரத ரிசர்வ் வங்கியில் பத்திரமாக மாற்றப்பட்டது.

19.39 லட்சம் பக்தர்கள் தரிசனம்

தற்போது 2021-2022 -ம் ஆண்டு சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலை வருமானம் ரூ.151 கோடியாக உயர்ந்து உள்ளது. இதில் காணிக்கையாக ரூ.61.5 கோடியும், அரவணை விற்பனை மூலம் ரூ.54.5 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.7 கோடியும் கிடைத்து உள்ளது. அதுமட்டுமின்றி சீசன் வருவாயில் நெய்யபிஷேகம் உள்ளிட்ட இதர வருவாயும் அடங்கும்.

சீசனையொட்டி, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 23 லட்சத்து 98 ஆயிரத்து 512 பக்தர்கள் முன்பதிவு செய்தனர். அதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 448 பேர் மட்டுமே சபரிமலையில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். இது 71.60 சதவீதம் ஆகும். அது மட்டுமின்றி உடனடி முன் பதிவு அடிப்படையில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 437 பேர் தரிசனம் செய்தனர். நடப்பு சீசனில் மொத்தம் 19 லட்சத்து 39 ஆயிரத்து 575 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News