செய்திகள்
ஜிகே வாசன்

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6.29 லட்சம் கோடி சலுகைகள் மாநில அரசுக்கு பேருதவி - ஜிகே வாசன்

Published On 2021-06-30 09:04 GMT   |   Update On 2021-06-30 09:04 GMT
மத்திய அரசு கொரோனாவுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் எடுக்கும் நடவடிக்கைகளை த.மா.கா சார்பில் வரவேற்று, பாராட்டி, வாழ்த்துகிறேன் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு, கொரோனாவினால் மக்கள் அடைந்துள்ள பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல்வேறு துறைகளுக்கு அறிவித்துள்ள சலுகைகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக மத்திய நிதி அமைச்சகம் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை கவனத்தில் கொண்டு 4 லட் சத்து 78 ஆயிரத்து 95 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு சுகாதாரம், சுற்றுலா, தொழில்துறை, குறு நிறுவனங்கள், உர மானியம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போன்றவற்றிற்காக அறிவித்திருக்கும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 905 கோடி ரூபாய்க்கான சலுகைகள் மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிக்கரமாக இருக்கும்.

நாட்டில் உள்ள ஏழைகள் கொரோனாவால் உணவு கிடைக்காமல் சிரமப்படக்கூடாது என்பதற்காக பிரதமரின் ஏழைகளுக்கான உணவு திட்டத்தின் மூலம் இலவச உணவுத் திட்டத்திற்காக கடந்த நிதியாண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 972 கோடி ரூபாய் ஒதுக்கி, தொடர்ந்து இந்த நிதியாண்டிற்கு இத்திட்டத்திற்கு 93 ஆயிரத்து 869 கோடி ரூபாய் நிர்ணயித்திருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.


மேலும் விவசாயிகள் உரங்களை வாங்குவதற்கும், குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கும், சுகாதார கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பலவற்றிற்கு மத்திய நிதியமைச்சகம் ஊக்கச்சலுகைகள் அறிவித்திருப்பதால் மக்களின் பொருளாதாரச் சிரமங்கள் குறையும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

மத்திய அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தி, முற்றுப்புள்ளி வைப்பதற்கும், கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதற்கும் மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கி, பொருளாதார உதவி மற்றும் நிவாரண உதவி செய்து வருவது நாட்டு மக்களை கொரோனா நோயில் இருந்து காப்பாற்றி, வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, நாட்டையும், நாட்டு மக்களையும் விரைவில் வளம் பெறச் செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

எனவே மத்திய அரசு கொரோனாவுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் எடுக்கும் நடவடிக்கைகளை த.மா.கா சார்பில் வரவேற்று, பாராட்டி, வாழ்த்துகிறேன்.

மத்திய அரசு சுகாதாரம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அறிவித்துள்ள 6 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொருளாதார சலுகைகள் கொரோனா காலத்தில் மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்பதால் சலுகைகள் விரைவில் மக்களைச் சென்றடைய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News