ஆன்மிகம்
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருட்களை படத்தில் காணலாம்.

சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வில்-அம்பு வைத்து பூஜை

Published On 2021-09-03 09:05 GMT   |   Update On 2021-09-03 09:05 GMT
காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் முதல் வில்-அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடைபெறும் இந்த பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒய்யம்மார்பட்டியை சேர்ந்த ரேணுகாதேவி (வயது 60) என்ற பக்தரின் கனவில் உத்தரவான வில், அம்பு ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி முதல் பச்சை வேட்டி துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பிழந்த 500 ரூபாய் 2 நோட்டுகள், 5, 2, 1 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.1008 மதிப்பிலும், 2 ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை பாக்கு, பூ ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

உத்தரவு பொருளான வில்-அம்பை கொண்டுவந்து வைத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ரேணுகாதேவி கூறியதாவது:-

நான் பல முறை சிவன்மலை முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். கடைசியாக ஒருமுறை இங்கு வந்து சென்றதற்கு பிறகு ஒரு நாள் என்னுடைய கனவில் சாமி வில், அம்பு வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். இதுபற்றி சிவன்மலை கோவில் அர்ச்சகர்களிடம் தெரியப்படுத்தி வில்-அம்பு வைத்து பூஜை செய்யுங்கள் என்று கூறினேன்.

மேலும் வில்-அம்பு வைத்து பூஜை செய்யப்படுவதால் வில்-அம்பு புராணங்களில் கடவுள் அரக்கர்களை வதம் செய்வதற்காக பயன்படுத்தினார். அதுபோல தற்போது உள்ள கொரோனா வைரசை சாமி வதம் செய்து முற்றிலும் அழிப்பார் எனவும், உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News