செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

அரசு கல்லூரிகள்- பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published On 2021-10-29 09:53 GMT   |   Update On 2021-10-29 09:53 GMT
கடந்த ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் அத்துடன் இணைந்த தர ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு நிதி நெருக்கடி தான் காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, பிற அரசுத்துறையினருக்கான பதவி உயர்வுகள் மறுக்கப்படாத நிலையில், கல்லூரி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு மட்டும் காலந்தாழ்த்தப்படுவதற்கு காரணம் அதற்கான நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் தான். பிற அரசுத்துறையினருக்கு காலம் சார்ந்து தானாக பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை தங்களின் செயல்பாட்டு சாதனைகளுடன் விண்ணப்பித்து அதனடிப்படையில் தான் பெற முடியும். இந்நடைமுறை பணி மேம்பாட்டுத் திட்டம் என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் பணி மேம்பாட்டுத் திட்டக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து தீர்மானிக்கும். கல்லூரிகளைப் பொறுத்தவரை மண்டல இணை இயக்குனர் இது பற்றி முடிவெடுப்பார். ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது சரி செய்யப்பட வேண்டும்.

எனவே, அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய அனைத்து பதவி தர ஊதிய உயர்வுகளையும் ஒரே தவணையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News