உள்ளூர் செய்திகள்
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்த காட்சி.

வங்கி அதிகாரி வீட்டில் நகை, லேப்டாப் கொள்ளை

Published On 2022-04-17 09:20 GMT   |   Update On 2022-04-17 09:20 GMT
திருச்சி வங்கி அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 13 பவுன் நகை மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

திருச்சி:

திருச்சி பொன்நகர் செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30). இவர் திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8&ந்தேதி தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்றிருந்தார்.

அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெங்களூருவில் இருந்து இன்று காலை திருச்சிக்கு வந்தார். அப்போது வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்ற அவர் முன்பக்க கதவை திறக்க முயன்றபோது அதிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் அங்குமிங்குமாக சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவின் லாக்கரில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், லேப்&டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து லட்சுமணன் உடனடியாக திருச்சி செஷன்ஸ் கோர்ட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் ஆள் இல்லாததை அறிந்து கொள்வதற்காக பூட்டியிருக்கும் வீட்டின் கேட்டுகளில் ஸ்டிக்கர் போன்று ஒரு வடிவத்தை ஓட்டிச் செல்கிறார்கள். அந்த ஸ்டிக்கர் கிழிந்து இருந்தால் வீட்டில் ஆள் இருக்கிறது என்று அறிந்து கொள்கிறார்கள்.

கிழியாமல் இருந்தால் வீட்டில் ஆள் இல்லை என்று உணர்கிறார்கள். இதுபோன்று நூதன முறையில் நன்கு வீட்டில் ஆள் இல்லை என்பதை உணர்ந்த பின்னரே வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மோப்ப நாய் பிரிவு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கட்ட விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News