செய்திகள்
பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி வளாகங்களில் காய்கறி-கீரை தோட்டம் அமைக்கும் பணி

Published On 2021-02-20 14:26 GMT   |   Update On 2021-02-20 14:26 GMT
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் பள்ளி வளாகங்களில் காய்கறி-கீரை தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
​ராமநாதபுரம்:

​​ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் காய்கறி மற்றும் கீரை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 கிச்சன் கார்டன்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த தோட்டத்தில் காய்கறி, கீரை வகைகள், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை போன்ற பயன்தரும் செடிகள், மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்படுகின்றன.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகள் வழங்குவதன் மூலம் வளர் இளம் பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதும், நெடுங்கால பயனாக மகப்பேறு கால இறப்பு விகிதம் குறைத்து, தாய்-சேய் நலம் உறுதி செய்வதுமே இந்ததிட்டத்தின் நோக்கமாகும்.

​அதன்படி, வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் காய்கறி-கீரை தோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டார். ஊட்டச்சத்து நிறைந்த கீரை மற்றும் காய்கறிகளை அதிகஅளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மாணவ- மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியதோடு, காய்கறி கீரை தோட்டத்தை சிறப்பாக பராமரித்து வரும் ஊராட்சி நிர்வாகத்தினரை கலெக்டர் பாராட்டினார்.

​அதன் தொடர்ச்சியாக வாலாந்தரவை கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பண்ணையின் செயல்பாடு குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கிராம அளவிலான நாற்றாங்கால் பண்ணையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் திட்ட இயக்குனர் பிரதீப் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அருள்சேகர், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகநாதன், நடராஜன், உதவி பொறியாளர் அருண் பிரசாத் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News