உள்ளூர் செய்திகள்
ஊட்டி, வால்பாறையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

2-வது வாரமாக முழு ஊரடங்கு: ஊட்டி, வால்பாறையில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

Published On 2022-01-16 11:22 GMT   |   Update On 2022-01-16 11:22 GMT
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவி வருவதை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அங்குள்ள இயற்கை அழகை பார்ப்பதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவி வருவதை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர நீலகிரியில் சுற்றுலா தலங்களை பார்வையிட வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் பார்வை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாக காணப்பட்டது.

தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கொடநாடு காட்சி முனை என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் அதனை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கினர்.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. எங்குமே ஆட்களை பார்க்க முடியவில்லை.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாம், கோவை குற்றலாம், பரளிக்காடு சுழல் சுற்றுலா, வால்பாறையில் கூழாங்கல் ஆறு உள்பட எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

இந்த சுற்றுலா தலங்களுக்கு கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வாகனங்களில் வருவார்கள். பொங்கல் பண்டிகை விடுமுறை நாளில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் குரங்குநீர்வீழ்ச்சி, ஆழியார் அணை பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு சென்றனர். அங்கு தேயிலை தோட்டங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசித்து வந்தனர். இன்று முழு ஊரடங்கு காரணமா சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது. 
Tags:    

Similar News