தொழில்நுட்பம்

ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் ஸ்மார்ட்போன் டீசர் - வெளியீடு தேதி மற்றும் முழு விவரங்கள்

Published On 2019-05-02 05:31 GMT   |   Update On 2019-05-02 05:31 GMT
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் வெளியீடு தேதி மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. #Google



கூகுள் நிறுவன பிக்சல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்தது. இதன் தொடர்ச்சியாக கூகுள் வலைதளத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் பெயர் தவறுதலாக வெளியானது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்கள் பிக்சல் 3ஏ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது.

தற்சமயம் ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்களின் புதிய டீசரையும் பதிவிட்டிருக்கிறது. டீசருடன் பிக்சல் 3ஏ மற்றும் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படம் எடுக்கும் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்பக்கம் மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு டீசர் பதிவிடப்பட்டுள்ளது.



இதில் “பிக்சல் யுனிவர்சில் மே 8 ஆம் தேதி புதிதாக ஒன்று மிகப் பெரியதாக வெளியாக இருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பிக்சல் ஸ்மார்ட்போனின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும். புகைப்படம் எடுக்க பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. வைடு ஆங்கிள் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News