வழிபாடு
சிவபெருமான் திருக்கல்யாணம்

பங்குனி உத்திரத்தன்று எந்த ஆலயத்தில் என்ன விழா?

Published On 2022-03-18 04:59 GMT   |   Update On 2022-03-18 04:59 GMT
பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அன்று திருவிளக்கு பூஜை செய்தால், பாவங்கள் விலகி புண்ணியம் பெறலாம்.
ஸ்ரீரங்கத்துப் பெருமாள் பங்குனி உத்திரத்தன்று காவிரியைக் கடந்து உறையூர் நாச்சியார் கோவிலுக்குச் சென்று கமலவல்லியோடு சேர்த்தியில் இருந்து வருவார். அன்று உறையூரில் பங்குனித் திருவிழா நிகழ்ந்ததை சங்க இலக்கியம் குறிக்கிறது.

பங்குனி உத்திர நாளில் காஞ்சி வரதராஜர், பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார்.

காஞ்சியில் கம்பை நதிக்கரையில் மாமரத்தினடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பார்வதி, இறைவன் திருவிளையாடலால் கம்பை நதியில் பெருகிய வெள்ளம், சிவலிங்கத்தைச் சிதைத்து விடுமே என்று அன்பால் பதறி, சட்டென்று அதை ஆரத் தழுவிக் கொண்டாள். அவள் அன்பை உணர்ந்து காட்சி தந்த அரன், தேவியைத் திருமணம் செய்து கொண்ட தினமும் இதுவே.

இன்றும் பங்குனி உத்திரத்தன்று காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இரவில் சுவாமி திருமணம் நடக்கும்போது, முன்பே வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் திருமணத்தையும் அப்போது நடத்திக் கொள்வது உண்டு.

மகேசன், மதுரையில் மீனாட்சியை மணம்புரிந்து கொண்ட நாளும் இதுவே. ஆண்டவனையே ஆண்ட தமிழச்சி ஆண்டாளுக்கும் ஆழிமழைக் கண்ணனுக்கும் பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் கோலாகலமாய்க் கொண்டாடப்படுகிறது.

லோபமுத்திரை அகத்தியரையும், பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்ட தினம் இதுதான். நந்திதேவர் திருமணம் நடந்த நாளும் இதுவே. திருமழபாடியில் அன்று நந்தி கல்யாணம் கண்டால், திருமணத் தடைகள் நீங்கு என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அன்று திருவிளக்கு பூஜை செய்தால், பாவங்கள் விலகி புண்ணியம் பெறலாம்.

காரைக்கால் அம்மையார் முக்திடையந்த தினம் என்பதால், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம் என சாத்திரங்கள் கூறுகின்றன.

பழநியில் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் தொடங்கியது பங்குனி உத்திர நாளில்தான். தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதாரமானது, அர்ஜுனன் பிறந்தது, வள்ளி அவதாரம் செய்தது ஆகியவையும் இந்நாளில்தான்.

ரதிதேவியின் வேண்டுதலை ஏற்று, திருலோக்கியில் மன்மதனை உயிர்ப்பித்ததும் பங்குனி உத்திரத்தில்தான். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்ததும் இந்த நாளில்தான்.

திருக்கழுக்குன்றம் அஷ்டகந்தக திரிபுரசுந்தரி அம்மனுக்கு மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு மூன்று நாட்களில் மட்டுமே முழு மகாபிஷேகம் (உச்சி முதல் பாதம் வரை) நடைபெறும். அவற்றுள் முக்கியமான நாள், பங்குனி உத்திர திருநாள். சந்திர பரிகாரத் தலமான திங்களூர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர நன்னாளில் காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுவது அபூர்வமான தரிசனம். இதனை தரிசித்தால் எல்லா வளமும் கிடைப்பதோடு, மனப் பிரச்சினைகள் நீங்கி, மனத்தெளிவுடன் வாழலாம்.
Tags:    

Similar News