செய்திகள்
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கொரோனா பரிசோதனையை குறைக்க கூடாது- கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Published On 2020-10-25 02:23 GMT   |   Update On 2020-10-25 02:23 GMT
கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் பரிசோதனை செய்வோரின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் முடிவுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு 4 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா உயிரிழப்பு, நகரம் மற்றும் புறநகர்களில் பாதிக்கப்படுகிறவர்கள் விகிதம், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் விகிதம், புதிதாக கொரோனா பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் அனைத்திலும் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டு வரும், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையையும், காய்ச்சல் முகாம்களையும் குறைக்க கூடாது.

வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளி பின்பற்றுவதையும், கைகளை அடிக்கடி கழுவுதலும், வேலை நடைபெறும் இடங்களில் முறையான வழிமுறைகளை பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும். மார்க்கெட்டுகளுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் கொரோனா அதிகம் பரவும் இடமாக மார்க்கெட்டுகள் மாறுவதற்கான நிலை ஏற்படும்.

போலீஸ் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து, விழா காலங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாதிரிகள் சேகரிப்பதற்கு ஆர்.பி.எஸ்.கே. வாகனங்களை ஈடுபடுத்தலாம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘டீன்’கள், சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான விற்பனை கூடங்கள், மால்கள், பஸ் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்த தகவல் மையங்கள் இருப்பதை துணை பொது சுகாதார இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சுகாதார தகவல் மையங்கள் மற்றும் விழா காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள தகவல் மையங்களில் கொரோனா தடுப்பு துண்டு பிரசுரங்கள், தெர்மல் ஸ்கேனர்கள், உடலின் ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி (பல்ஸ் ஆக்சி மீட்டர்) உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து ஒத்துழைப்பு கிடைத்தால் கொரோனா தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். மேலும், அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இது பண்டிகை காலம் என்பதற்காக பரிசோதனைகள் செய்வதை பொதுமக்கள் தாமதம் செய்ய வேண்டாம்’ என்று கூறினார்.

ஆய்வின்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்ட டாக்டர்கள் பலர் இருந்தனர்.
Tags:    

Similar News